Wednesday, March 14, 2012

கவுன்சிலரின் பதவியை ரத்து செய்யக்கோரி தேர்தல் கமிஷனிடம் புகார் !


க‌வுன்சில‌ர் சுரேஷ்

முன்னாள் க‌வுன்சில‌ர் வேலுச்சாமி

தற்போதைய 1வது கவுன்சிலர் சுரேசின் பதவியை ரத்து செய்யக்கோரி தலைமை தேர்தல் ஆணையத்துக்கு கீழக்கரை நகராட்சி முன்னாள் கவுன்சிலர் வேலுச்சாமி மனு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து புகார் ம‌னுவில் கூறியுள்ள‌தாவ‌து,


கீழக்கரை நகராட்சியில் 1- வது வார்டு கவுன்சிலராக உள்ள R.சுரேஷ் என்பவர் அக்டோபர் 2011-ல் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் வேட்பு மனுவில் உண்மை தகவல்களை மறைத்து தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.

கீழக்கரை நகராட்சியில் R.சுரேஷ் 1 ஏப்ரல் 2009 முதல் 31 மார்ச் 2012 ஆம் நாள் வரை மூன்று ஆண்டுகளுக்கு தினசரி மார்க்கட் வசூல் செய்யும் உரிமம் பெற்று கிழக்கரை நகராட்சி மூலம் வருமானம் அனுபவித்து வருகின்றார். கீழக்கரை நகராட்சி அலுவலக கடித நாள்:- 19.01.2012 இதனை உறுதிபடுத்துகின்றது.

நகராட்சியில் தினசரி மார்க்கட் வசூல் மூலம் வருமானம் அனுபவித்து கொண்டு இருக்கும் R.சுரேஷ் என்பவரின் வேட்பு மனு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகளின் சட்டம் 1920-ன் பிரிவு 49(2) (C)-ன் படி இவரின் வேட்பு மனு கீழக்கரை நகராட்சி தேர்தல் அதிகாரியான R.போஸ் என்ற ஆணையரால் நிராகரிக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் இவருடைய வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகளின் சட்டம் 1920-ன் பிரிவு 50(1) (d)-ன் படி நகராட்சியில் குத்தகை மூலம் பலன் அனுபவித்துக்கொண்டு இருப்பவர் கவுன்சிலர் பதவி வகிக்க தகுதி அற்றவர் என்று வரையரை செய்யப்பட்டுள்ளது.

ஆகவே, மதிப்பிற்குரிய மாநில தலைமை தேர்தல் ஆணையர் அவர்கள் உண்மை தகவலை மறைத்து வேட்பு மனு தாக்கல் செய்து கீழக்கரை நகராட்சியில் கவுன்சிலராக உள்ள R.சுரேஷ் என்பவரை பதவி நீக்கம் செய்து ஆணை வழங்க வேண்டுமாறும் உண்மைத் தகவலை வேட்பு மனுவில் மறைத்தற்காக இவர் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமாறும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். மேலும், வேட்பு மனு பரிசீலனையில் முறைகேடு செய்துள்ள கீழக்கரை நகராட்சி தேர்தல் அதிகாரியான திரு. R.போஸ் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு குறிப்பிட‌ப்ப‌ட்டுள்ள‌து

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.